அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவோருக்கான ஹெச்-1 பி விசா வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஹெச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி, அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் முனைப்பில் அமெரிக்க அரசு இருக்கிறது.
"அமெரிக்க பொருள்களை வாங்கு; அமெரிக்கர்களை வேலையில் அமர்த்து" என்ற முழக்கம் எழும்பி வரும் நிலையில், பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், வெளிநாட்டு பணியாளர்களுக்குப் பதிலாக, அமெரிக்கர்களை வேலையில் அமர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஹெச்-1 பி விசாவை விரும்புவோர் அநேகர் அது கிடைக்காத நிலையில் 'கோல்டன் விசா' என்று கூறப்படும் ஈபி-5 விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஈபி-5, அமெரிக்காவில் 5 லட்சம் டாலர் முதலீடு செய்து 10 பேருக்கு வேலை வழங்கக்கூடிய முதலீட்டாளர்களுக்கான விசாவாகும். கிரீன் கார்டு கிடைக்க வழி செய்யும் இந்த விசாவில் முதலீட்டாளரின் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேறலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை முடிந்த காலத்தில் 174 ஈபி-5 விசாக்கள் இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை பொறுத்து இது 17% அதிகமாகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து 307 விண்ணப்பங்கள், ஈபி-5 விசா கேட்டு வந்துள்ளன. ஹெச்-1 பி விசா வைத்திருப்பவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.