ஹெச்1பி விசா விதிமுறைப்படி சம்பளம் அளிக்காத அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்க தொழிலாளர் நல வாரியம் அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான ஐடி நிறுவனம்தான் 'க்லெளட்விக் டெக்னாலஜிஸ் இன்கார்ப்பரேஷன்'. இந்நிறுவனத்தில் ஹெச்1பி விசா முறையில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களே பெருமளவில் பணியாற்றுகின்றனர்.
இந்தப் பணியாளர்களுக்கு விசா நடைமுறைப்படி மாதம் 8,300 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால், பணியாளர்களில் 12 இந்தியர்களுக்கு மாதம் 800 டாலர்களே ஊதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, அமெரிக்க தொழிலாளர் நல வாரியம் இப்பிரச்னையை எடுத்து விசாரித்து 1,73,044 அமெரிக்க டாலர்களை பாதிக்கப்பட்ட 12 இந்தியர்களுக்கும் இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு ஏற்கெனவே ஹெ1பி விசா சிக்கல் மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் வேளையில், இத்தகைய ஊதியப் பிரச்னைகளும் நீடித்து வருகின்றன.