பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் 2018 தொடரின் 31ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
அதிகப்பட்சமாக மனன் வோரா 45 ரன்களும், பிரண்டன் மெக்கல்லம் 37 ரன்களும், விராட் கோலி 32 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கிராண்ட்ஹோம் 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். மும்பை இண்டியன்ஸ் தரப்பில் ஹர்த்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 168 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை அனாவசியமாக தாரை வார்த்தது. இஷன் கிஷன் [0] முதல் ஓவரிலேயே வெளியேறி வீழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் [9], ரோஹித் சர்மா [0], பொல்லார்ட் [13] என அடுத்தடுத்து வெளியேற 47 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஹர்த்திக் பாண்டியா, டுமினி இணை ஓரளவு தாக்குப் பிடித்தது. 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டுமினி ரன் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய ஹர்த்திக் பாண்டியா அரைச்சதம் கடந்த நிலையில், டிம் சௌதி பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இண்டியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தனர். இதனால், பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.