அமெரிக்காவின், டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலையின் 2017 -2018ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு விழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு போட்டி பரிசுகளும் நிலை மேம்பாட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் இயங்கி வரும் டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலைகளில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயின்று வருகின்றனர். டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் மாணவர்களுக்கு தமிழ் பாடம் நடத்தப்படும். ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியில், ஆண்டு விழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 2017-2018ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா கடந்த 20ஆம் தேதி மின்னசோட்டா மாநிலத்தின் மின்னியாபொலிஸ் நகரத்தில் உள்ள ப்ளூமின்ங்டன் போர்ட்லாந்து அவென்யூ, வேலி வியூவ் மிடில் ஸ்கூல் என்ற பள்ளியில் நடைபெற்றது. மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு தமிழ் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, திருக்குறள் மற்றும் ஆத்திசூடி மனப்பாடப்போட்டி, பேச்சுப்போட்டி, பொருள் கூறுதல், கதை கூறுதல், ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டு அறிவுத்திறன் போட்டிக்கான பரிசை பெற்றனர். இதைதவிர, இந்த கல்வியாண்டில் படிப்பில் தேர்ச்சி பெற்ற 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலை மேம்பாட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களை தவிர, இவ்விழாவில் டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலையில் தன்னார்வத்தின் பேரில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் தமிழ் புத்தகங்கள் மற்றும் பாராட்டு பத்திரம் அளித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில், டுவின் சிட்டீஸ் பாடசாலையின் முதல்வர் மதன் குமார் ராஜேந்திரன், துணை முதல்வர் விஷ்வநாதன் முத்துராமன், பொருளாளர் ராஜேஷ் செல்வராஜ், செயலாளர் அர்ச்சனா பாலசுப்ரமணியன் மற்றும் பள்ளி நிர்வாக குழுவினர் ஆகியோர் கலந்துக் கொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பரிசுகளை வழங்கினர். விழாவில் மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்து.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com