ஹெச்-1பி விசா: டிரம்புக்கு எதிராக வரிந்து கட்டும் அமெரிக்க நிறுவனங்கள்

by SAM ASIR, Aug 26, 2018, 12:53 PM IST
அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், அதிபர் டிரம்பின் குடிவரவு கொள்கைகளைக் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இப்போதைய விதிகள் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் ஜேமி டிமோன், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் டோக் பார்க்கன் உள்பட 59 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
திறன்மிகு வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கைத்துணை அமெரிக்காவில் பணியாற்றும் அனுமதியை ரத்து செய்தல் போன்ற நிலையற்ற குடிபுகல் முடிவுகளால் தங்கள் நிறுவன பணியாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு செயலர் கிறிஸ்ட்ஜென் நெய்ல்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 
 
சட்டப்பூர்வமாக வசிக்கும் திறன்மிகு வெளிநாட்டு பணியாளர்களுக்கு பிரச்னைகளை தரும்வகையில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் மாகாண அரசாங்கங்கள் குடிபுகல் விதிகளை முறையாக பின்பற்றவேண்டும். திறன்மிகு பணியாளர்களுக்கு தொந்தரவு தரப்படுமாயின், அது ஒட்டு மொத்த அமெரிக்காவின் தொழில் போட்டி திறனை பாதிக்கும் என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.
 
ஹெச்-1பி விசாவால் பயன்பெறும் பெரும்பாலான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கணிசமான தொழில்நுட்ப வல்லுநர்களை மூன்றாம் நபர் இடங்களில் பணியமர்த்தியுள்ளன. அமெரிக்க வங்கி துறை, போக்குவரத்து மற்றும் வணிக சேவைகள் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களையே சார்ந்து இயங்குகின்றன.
 
ஆண்டுக்கணக்கில் எந்தவித பிரச்னையுமின்றி அமெரிக்காவில் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு திடீரென அனுமதி மறுக்கப்படுவதற்காக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறையை அவர்கள் குறை கூறியுள்ளனர். ஹெச்-1பி என்னும் திறன்மிகு தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பிரச்னை எழுந்தால், அந்த இடத்தில் இன்னொரு வெளிநாட்டு பணியாளரை நியமிக்க வேண்டிய இக்கட்டும் நேர்கிறது.
பல பணியாளர்களுக்கு வாழ்க்கைத்துணைக்கு அமெரிக்காவின் பணியாற்றும் அனுமதி ரத்து செய்யப்படுவதும் பிரச்னை தருகிறது. பணியிடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை திறமை மிக்கவர்களை பயன்படுத்த தடையாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
நிறுவனங்களுக்காக பேசக்கூடிய வர்த்தக வட்டமேஜை அமைப்புக்கு தற்போது டிமோன் தலைமை வகிக்கிறார். இந்த அமைப்பு பல ஆண்டுகளாக அமெரிக்க குடிபுகல் கொள்கை பற்றி விவாதித்து வந்தாலும், தற்போது இருக்கும் பிரச்னைகளை முன்னிறுத்தியே இக்கடிதத்தை எழுதியுள்ளனர். 
 
இந்நிலையில், கிறிஸ்ட்ஜென்  நெய்ல்சன், நிர்வாகம் குடும்பங்களை பிரிக்கும்வண்ணம் கொள்கையை வகுக்கவில்லை. ஆனால், சட்டத்தை மீறுபவர்களை தடுக்கும் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ஹெச்-1பி விசா: டிரம்புக்கு எதிராக வரிந்து கட்டும் அமெரிக்க நிறுவனங்கள் Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை