திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, கருணாநிதி சமாதியில் வேட்புமனு வைத்து ஆசி பெற்று அண்ணா அறிவாலயத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு, காலியாக உள்ள திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுபவர்கள், தங்களின் வேட்புமனுவை இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர். இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.
இவரைதொடர்ந்து, துரைமுருகனும் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அண்ணா அறிவாலயத்தில் தான் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதனால், மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் அண்ணா அறிவாலம் புறப்பட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.