அகமதாபாத்: இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், கடல்நீரை குடிநீராக்கும் அதிநவீன ஜீப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
ஆறு பாள் அரசுமுதற பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியா வந்துள்ளார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை குஜராத் தலைநகர் அகமதாபாத் நகருக்கு வந்த நேதன்யாகு, பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள காந்தி சமாதிக்கு சென்றார்.
அங்கு, காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய இவர்கள், அங்கு 20 நிமிடங்கள் இருந்து, பின்னர் காந்தி வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெஞ்சமின் நேதன்யாகு அசுத்தமான நீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் அதிநவீன ஜீப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். அந்த ஜீப்பபை இந்தியா பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்திற்குட்பட்ட சுய்கம் கிராம மக்களுக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் மோடி அர்ப்பணம் செய்தார்.
இந்த ஜீப், ஒரு நாளுக்கு சுமார் 80 ஆயிரம் லிட்டர் அசுத்தமான ஆற்று நீர் மற்றும் 20 ஆயிரம் லிட்டர் அளவிலான உவர்ப்புத்தன்மையுடன் கூடிய கடல்நீரை உலகத்தரம் வாய்ந்த குடிநீராக மாற்றும் ஆற்றல் கொண்டதாகும். இதன் விலை ரூ.71 லட்சம்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது: கடந்த ஆண்டு நான் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, என்னை ஒரு ஜீப்பில் அமரவைத்து பெஞ்சமின் நேதன்யாகு ஓட்டிச்சென்றார். அசுத்த நீரை குடிநீராக சுத்திகரிக்கும் அந்த வாகனத்தை அன்பளிப்பாக இங்கு அவர் கொண்டு வந்துள்ளார். இந்த அன்பளிப்புக்காக அவருக்கு இந்திய மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
எல்லைப் பகுதியில் உள்ள சுய்கமில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனம் மூலம் கிடைக்கும் தூய்மையான குடிநீர் அங்குள்ள இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும், சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அளிக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.