36 சதவீத கிராமப்புற இளைஞர்களுக்கு நாட்டின் தலைநகர் ‘புதுதில்லி’ என்று தெரியாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில், நாட்டின் கல்வி நிலையை அறிவதற்கான ஆய்வை ‘பிரதம்’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம்நடத்தியது. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 28 மாவட்டங்களை தேர்வு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
14 முதல் 18 வயதிலான குழந்தைகளின் கல்வித்தரம், அவர்கள் புரிந்து கொள்ளும் விதம், வாசிக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இந்த ஆய்வில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 24 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களுக்கு மேல் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இதில்தான், கிராமப்புறங்களில் 14 முதல் 18 வயது வரையிலான இளைய தலைமுறையினரில் 36 சதவிகிதம் பேருக்கு, நாட்டின் தலைநகர்தான் ‘புதுதில்லி’ என்ற தகவல்கூட தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில் பெரும்பாலான இளைஞர்களுக்கு முறையான கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறும் பிரதம் நிறுவனத்தின் ஆய்வறிக்கை, “கிராமப்புறங்களில் ஆண்களில் 28 சதவிகிதம் பேர்பள்ளிகளில் சேர்வதில்லை; பெண்களில் 32 சதவிகிதம் பேர் பள்ளிகளில் சேர்வதில்லை” என்றும் தெரிவித்துள்ளது.
“25 சதவிகிதம் பேருக்கு தாய்மொழியில் தங்கள் பாடப்புத்தகத்தை சரியாக வாசிக்க தெரியவில்லை; 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோருக்கு எண்களில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத்திற்கு வித்தியாசம் தெரியவில்லை.
43 சதவிகிதம் பேர் மட்டுமே எண்களின் இலக்கத்தை சரியாக குறிப்பிட்டுச் சொல்கின்றனர்; 14 வயது குழந்தைகளில், 53 சதவிகிதம் பேருக்கு ஆங்கிலத்தை வாசிக்க முடிகிறது.
14 சதவிகிதம் பேருக்கு இந்திய வரைப் படத்தை அடையாளம் காண முடியவில்லை. அதேசமயம் 79 சதவிகிதம் பேர் தாங்கள் வசிக்கும் மாநிலத்தை சரியாக அடையாளம் காண்கின்றனர்” என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.