இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2 எடுத்த முதல்புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ), புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘கார்டோ சாட்-2’ உட்பட 31 செயற்கைக் கோள்களை ‘பிஎஸ்எல்வி சி-40’ ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமையன்று கடந்த ஜனவரி 12ஆம் தேதி அன்று விண்ணில் ஏவியது.
‘கார்டோசாட்-2’செயற்கைக்கோள், அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாகும். புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 510 கி.மீ.உயரத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் இது புதிய சாதனையாகவும், புதிய மைல் கல்லாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கார்ட்டோசாட்-2 தனது பணியைத் துவங்கியுள்ளது. கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தை உள்ளடக்கிய இந்த படத்தை எடுத்துள்ளது.