கிரீமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் இரு கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. அவற்றில் இருந்த மொத்தம் 32 பணியாளர்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தான்சேனியா நாட்டு கொடிகளை ஏந்திய மாஸ்ட்ரோ மற்றும் கேண்டி என்ற இரு எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்கியுள்ளன. ரஷ்ய கடல் எல்லைக்குச் சற்று தள்ளி கருங்கடல் பகுதியில் திங்களன்று (டிசம்பர் 21) இரவு ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றியபோது விபத்து நிகழ்ந்து கப்பல்கள் தீப்பற்றியுள்ளன.
கேண்டி கப்பலில் எட்டு இந்தியர்கள், ஒன்பது துருக்கிய மாலுமிகள் உள்பட பதினேழு பணியாளர்களும், மாஸ்ட்ரோ கப்பலில் ஏழு இந்தியர்கள், ஏழு துருக்கியர்கள் மற்றும் லிபிய தேசத்தவர் என பதினைந்து பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்தக் கப்பல்கள் சட்டவிரோதமாக சிரியா தேசத்துக்கு நீர்ம வாயுவை கடத்தியதாக கூறப்படுகிறது.
"இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மற்றவர்கள் இன்னும் மருத்துவமனையை வந்தடையவில்லை. அவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்படும்," என்று கிரீமியா அறிவித்துள்ளது.
சில இந்தியர்கள் உயிர் பிழைத்துள்ளதாக மும்பையிலுள்ள கப்பல் போக்குவரத்துத் துறையின் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.