வரலாறு காணாத உறைய வைக்கும் பனியால் அமெரிக்காவின் பெரும் பகுதி உறைந்து போய் கிடக்கிறது. கொதிக்கும் நீர் நொடியில் ஐஸ் ஆக மாறுகிறது, சூடான நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உடனுக்குடன் கெட்டியாகி விடுகிறது. அணியும் உடைகளும் நிமிடத்தில் பனி அப்பி வெடவெடவென ஆகி எங்கு பார்த்தாலும் உறைபனியால் நடுநடுங்கிப் போய் உள்ளனர் அமெரிக்க வாசிகள் .
எப்போதும் துருவப் பகுதியில் நிலவும் போலார் வெர்டெக்ஸ்(Polar vortex) சற்று இடம்பெயர்ந்து அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது. இதனால் ஆர்க்டிக் துருவப் பிரதேசத்தில் நிலவும் குளிர் நிலை அமெரிக்காவின் மத்திய, மேற்குப் பகுதிகளில் நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத உறை பனியால் அமெரிக்கவாசிகள் உறைந்து போயுள்ளனர்.
வெப்பநிலை மைனஸ் 45, மைனஸ் 49 டிகிரி செல்சியஸ் என படுபாதாளத்துக்குப் போய் மக்களை அச்சுறுத்துகிறது.
கொதிக்கும் நீரை வெளியில் வீசினால் அப்படியே ஐஸ் கட்டியாகி விடுகிறது. சூடான நூடுல்ஸ் உணவு கெட்டித்து விடுகிறது. உடைகள் நொடியில் பனி அப்பி கெட்டியாகி விடுகிறது. தலைமுடிகள் நிறம் மாறுகிறது. டாய்லெட் டப்பில் தண்ணீர் ஐஸா கி வெடிக்கும் போல உப்பிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் உறைபனி தான்.
இதனால் அமெரிக்காவின் பெரும் பகுதி மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதைவிடக் கொடுமையாக நாய், பூனை, குதிரை என வளர்ப்புப் பிராணிகளின் பாடுதான் படு திண்டாட்டம். குளிரில் நடுங்கும் பிராணிகளை பாதுகாக்க படாத பாடுபடுகின்றனர்.
அமெரிக்க அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. உறைபனியை சமாளிப்பது எப்படி என்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது.