நெதர்லாந்தை சேர்ந்த டைனாகாமர்ஸ் என்ற நிறுவனத்தை வாங்க இருப்பதாக டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
தொலைதொடர்பு துறையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்யும் விதத்தில் இந்நடவடிக்கையை எடுப்பதாக டெக் மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்முக செயல்பாடு (Omnichannel), விற்பனை போன்ற பல்வேறு துறைகளில் டைனாகாமர்ஸூம் டெக் மஹிந்திராவும் பல ஆண்டுகள் உலக அளவில் இணைந்து பணியாற்றியுள்ளன. டிஜிட்டல் பரிமாற்றத்தை எளிமையாக்கும் இலக்கோடு மொபைல் மற்றும் கம்பி (cable) வழி நிரந்தர இணைப்பு போன்ற பன்முக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆகவே, இந்த இணைப்பு தங்களை தொலைதொடர்பு துறையில் தரமான சேவை வழங்குவதற்கு தகுதிப்படுத்தும் என்று டெக் மஹிந்திரா நம்புகிறது.
ஏறத்தாழ 128 கோடி ரூபாய் மதிப்புள்ள 15.9 மில்லியன் யூரோ விலைக்கு டைனாகாமர்ஸின் பங்குகளை டெக் மஹிந்திரா வாங்குவதுடன் அந்நிறுவனத்திற்கு இருக்கும் 11.48 மில்லியன் டாலர் கடனுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளது. இந்த வர்த்தக பேர நடவடிக்கை, பிப்ரவரி மாதமே நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.