`33 ஆண்டுக்கு பிறகு மேஸ்ட்ரோவுடன்' -மீம்ஸ் போட்டு நெகிழ்ந்த இசைப்புயல்!

இளையராஜாவுடன் தான் இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

1,000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசைஞானி இளையராவின் பாராட்டுவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். இளையராஜா 75 என்ற பெயரில் நடந்த இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு இளையராஜாவை கௌரவப்படுத்தினர்.

பல்வேறு தடைகளை தாண்டி இரண்டு நாட்கள் விழா நடந்தது. இதன் முதல்நாளில் தனது சிஷ்யனும், ஆஸ்கர் விருதும் வென்ற ஏ.ஆர்.ரகுமானுடன் ஒன்றாக மேடை ஏறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இளையராஜா. அப்போது, ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் கீபோர்டு வாசிக்க மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை பாடி காட்டினார் இளையராஜா. மேலும் ரகுமான் தன்னுடன் இணைந்து 500 படங்களுக்கு மேல் பணியாற்றியற்றியதாக பெருமிதம் கொண்டார். அதற்கு பதிலளித்த ரகுமான், ``உங்களுடன் இணைந்து ஒருபடத்தில் பணிபுரிவதே பெருமை தான்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. அப்போது ரசிகர் ஒருவர் ரகுமான் இளமை பருவத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து நோட்ஸ் எடுக்கும் புகைப்படம் ஒன்றை மீம்ஸாக பதிவிட்டுள்ளார். அது ரகுமானின் கண்களில் பட உடனடியாக அந்த புகைப்படத்தையும் நேற்றுமுன்தின விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து பதிவிட்டுள்ளார்.

கூடவே, `33 வருடங்களுக்குப் பிறகு மேஸ்ட்ரோவுடன், இணையில்லா மகிழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News