விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அனுமதி அளித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்தார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்த விவகாரம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்த கடந்த 2015-ம் ஆண்டு மல்லையா மீது வழக்குப் பதியப்பட்டது. வழக்கு நடவடிக்கையை அடுத்து நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பியோடினார். இதே விவகாரத்தில் சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்குகளைப் பதிவு செய்து கெடுபிடி காட்டின.
இதனையடுத்து லண்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் சூடு பிடித்தன. அதற்காக பிரிட்டன் உதவிய நாடிய மத்திய அரசு, இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளின் கூட்டமைப்பு கோரிக்கை படி பிரிட்டன் நீதிமன்றம் மல்லையா சொத்துகளை முடக்க உத்தரவிட்டது.
இதனிடையே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த லண்டன் நீதிமன்றம், இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தடையில்லை எனக் கூறியது.
இதற்கிடையே, லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நேற்று கையெழுத்திட்டார். இருப்பினும் அனுமதிக்கு எதிராக மல்லையா மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அவர் மேல்முறையீடு செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.