புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்திய மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் திரும்பும் திசையெங்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனக் குரல்கள் பார்க்க முடிகிறது. 20 ஆண்டுகளில் இல்லாத தாக்குதல் என்பதால் ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் மீது விமர்சனக் கணைகள் வைப்பதில் தப்பவில்லை. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை மத்திய அரசு நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. எந்நேரத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற சூழ்நிலையில் அதற்கு முன்னதாக மத்திய அரசு சில சம்பவங்களை பாகிஸ்தானுக்கு எதிராக செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு சுமார் 200 சதவிகிதம் வரி விதித்தது மத்திய அரசு. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதியை திருப்பிவிடும் வேலைகளிலும் மும்மரம் காட்டி வருகிறது.
மத்திய அரசின் நடவடிக்கைகள் இப்படி என்றால் இந்திய விவசாயிகளும் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக பாகிஸ்தானுக்கு செய்துவந்த காய்கறி ஏற்றுமதியை நிறுத்திவிட்டனர். இதனால் பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது காய்கறி விலை. உத்தரபிரதேசம், டெல்லி போன்ற வட மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவு காய்கறி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது முற்றிலுமாக அவை நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியை முற்றிலுமாக விவசாயிகள் நிறுத்தியுள்ளனர்.
இதனால் தற்போது பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதேபோல் ஒருகிலோ பச்சை மிளகாய் ரூ.150 மேலாகவும், மற்ற காய்கறிகள் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், அவை இந்தியாவை போல குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படாமல், அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதாலும் போதிய அளவு இறக்குமதி செய்யப்படுவதில்லை என்பதாலும் இந்த உச்சபட்ச விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. விலையேற்றத்தை கட்டுப்படுத்தமுடியாமல் பாகிஸ்தான் அரசு தற்போது திணறி வருகிறது.