நடிகர் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பெண் நர்மதா. இவர் தான் சில நாட்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன்பு கண்டுவிடும் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சில போராட்டங்களையும் நடத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டம், மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் என தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து போராட்டம் நடத்தி அதற்காக சிறைக்கும் சென்றிருக்கிறார். இந்தநிலையில் இவர் இன்று நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் பிளக்ஸ் போர்டுக்கு பாலபிஷேகம் செய்வதற்காக கடந்த 20ம் தேதி நான் மதுரை சென்றிருந்தேன். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்றிருந்தேன். அங்கு பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போதாக்குறைக்கு பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டன.
சில கடைகள் மீது கல் எரிந்து போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுச்சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மறிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்த போது கருணாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சிக்காகவே இவ்வாறு செய்திருந்தது தெரியவந்தது. கருணாஸ் ஏற்கனவே சென்னையில் கலவரம் ஏற்படும் வகையில் பேசி கைதானவர். தொகுதி மக்களுக்கும் உருப்படியாக ஏதும் செய்ததாக தெரியவில்லை. இப்படியான நிலையில் மதுரை சம்பவத்துக்கும் அவர் தான் காரணம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.