பால்கோட் தாக்குதலை அடுத்து நேற்று பாகிஸ்தான் விமானப்படைக்கும் இந்திய விமானப்படைக்கும் இடையே சண்டை நடைபெற்றது. அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் இந்திய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதேபோல் இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையோரக் கிராமத்தில் கீழே விழுந்தது. அதில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
தொடர்ந்து அபிநந்தன் பேசுவது போன்ற வீடியோ காட்சியை வெளியிட்ட பாகிஸ்தான் ராணுவம், இந்திய விமானியை நாங்கள் கண்ணியமாகவே நடத்துகிறோம் எனக் கூறியது. ஆனால் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது எனக் கூறி அந்நாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் விமானியை அபிநந்தனை பாகிஸ்தான் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், அவருக்கு எந்த சித்ரவதையும் ஏற்படக்கூடாது எனவும் இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை இந்திய மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மக்கள் வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் விமானி அபிநந்தனை திருப்பி அனுப்ப தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் முகமது குரோஷி, ``நாங்கள் பொறுப்பான நாடு என்பதை இந்திய மக்களுக்கு எடுத்துரைப்போம். இந்திய விமானிக்கு எங்களுக்கும் தனிப்பட்ட வகையில் விரோதம், பகை கிடையாது. இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு மாறாக ஜெனீவா ஒப்பந்தத்தை பின்பற்றி பிடிபட்ட விமானியை நன்றாகவே கவனித்து வருகிறோம். இந்தியாவின் கோரிக்கைப்படி விமானியை திருப்பி அனுப்ப தயாராகவே இருக்கிறோம். ஆனால் நேற்று முன்தினம் பால்கோட்டில் நடத்தியது போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்தமாட்டோம் என இந்தியா உறுதிகொடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.