ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்புகளில் இது வரை 130 பேர் வரை பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கொழும்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா கூறுகையில், ‘‘நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம், விரைவில் இதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கண்டுபிடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள நிலையில் குண்டு வெடிப்பு குறித்து தகவலறிந்து அங்கிருந்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரையாற்றியுள்ளார்.
இதற்கிடையே, கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் ஹர்ஷா டிசில்வா கூறுகையில், ‘‘குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டினரும் சிக்கி பலியாகியிருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்புகளில் இந்தியர்கள் பலியாகியுள்ளார்களா, காயமடைந்திருக்கிறார்களா என்று இந்திய தூதரகம் தீவிரமாக தகவல் சேகரித்து வருகிறது.