சுயமாக சம்பாதித்து முன்னேறிய அமெரிக்கப் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
சுயமாக சம்பாதித்து அமெரிக்காவின் பணக்காரப் பெண்களாக உருவெடுத்த 21 வயது முதல் 92 வயது வரை உள்ள 80 பேர் கொண்ட பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதலாவது இடத்தை ஏபிசி சப்ளை நிறுவனத்தின் தலைவரான டயானா ஹென்ரிக்ஸ் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 700 கோடி டாலர் ஆகும்.
இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண்கள் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர். லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த ஜெயஸ்ரீ உல்லாள், இப்போது அமெரிக்காவில் உலக பெண் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். தனது 58-வது வயதில் 140 கோடி டாலர் சொத்துக்களுடன் பட்டியலில் 18-வது இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் மிக்சிகனில் 1980ம் ஆண்டில் ஒரு வீட்டில் தனது கணவர் பரத்துடன் சேர்ந்து வெறும் 2000 டாலர் முதலீட்டுடன் ஐ.டி. நிறுவனம் தொடங்கிய சின்டல் நிறுவன துணை நிறுவனர் நீரஜா சேத்தி 100 கோடி டாலர் சொத்துக்களுடன் பட்டியலில் 23-ம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு 64 வயது ஆகிறது.
ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி துணை நிறுவனர் நேஹா நர்கெடே என்ற பெண் கோடீஸ்வரர், 36 கோடி டாலர் சொத்துக்களுடன் பட்டியலில் 60-ம் இடம் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் பட்டியலில் மீடியா புகழ் ஒபரா வின்பிரே, பாப் ஸ்டார் ரிஹானா, மடானோ உள்ளிட்டோரும் இடம் பெற்றனர்.