மாஸ்கோ: ரஷ்யாவில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே திடீரென விழுந்து நொறுங்கியதில் 71 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று ஆர்ஸ்க் நகருக்கு ஏ.என்.128 ரக உள்ளூர் போக்குவரத்து விமானம் ஒன்று 65 பயணிகள் உள்பட 71 பேருடன் புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் காணாமல் போனது. மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. மேலும், விமானம் விழும்போதே தீப்பிடித்து எறிந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 71 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் இரங்கல்:
ரஷ்யாவில் விமானம் விழுந்து 71 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஷ்யாவில் நடைபெற்ற விமான விபத்து பற்றிய செய்தி அறிந்தேன். விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை பற்றியே எனது எண்ணங்கள் செல்கின்றன.’ என்று குறிப்பிட்டுள்ளார்.