பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால், லிட்டர் விலை ரூ.140 ஆக உயர்ந்தது.
பாகிஸ்தான் நாட்டில் பால் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையும் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, மொகரம் பண்டிகையின் போது, ஸ்டால்கள் அமைத்து மத ஊர்வலங்களில் செல்வோருக்கு பால், ஜூஸ் போன்றவை தரப்படும். இதனால், பாலின் தேவை பல மடங்கு அதிகரிக்கும்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மொகரம் பண்டிகையையொட்டி பாலின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக, கராச்சியில் பால் லிட்டர் ரூ.120 முதல் ரூ.140 வரையும், சிந்து மாகாணத்தில் ரூ.140க்கும் விற்பனையானது. பாலின் விலையை கட்டுப்படுத்துவதற்கு கராச்சி ஆணையர் இப்திகார் ஷால்வானி தவறி விட்டார் என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் ரூ.113க்கும், டீசல் லிட்டர் ரூ.91க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலைகளை விட பாலின் விலை பல மடங்கு உயர்ந்தது அந்நாட்டு மக்களிடையே பரபரப்பான செய்தியாகி விட்டது.