சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எமெர்ஜென்சி நிறுவனத்தின் அப்கைக் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த 2 நாட்களுக்கு ட்ரோன் ஏவுகணை (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, குர்அய்ஸில் உள்ள அதே நிறுவனத்தின் எண்ணெய் வயலிலும் தாக்குதல் நடந்தது. இதனால் இரு இடங்களிலும் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் எதிரியான ஈரான் நாடுதான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும், தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூறியது. ஏற்கனவே, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை கூறினாலும், ஈரான் அதை மறுத்தது.
இதற்கிடையே, ஏமன் நாட்டில் அரசிற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டுவரும் ஹவுதி தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
உலகில் மிகப்பெரிய ஆலையான அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தாக்குதல் நடந்ததால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. இதனால், சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. இதனால், உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் ஏற்பட்டது.
இந்நிலையில், சவுதி அரேபிய மன்னர் சல்மானின் மகனும், அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சருமான அப்துல்லா பின் சல்மான் கூறுகையில், ஒரு நல்ல செய்தி. எண்ணெய் ஆலையில் நாசமான 2 முக்கிய நிலையங்களை சரி செய்து விட்டோம். அங்கு நிறுத்தப்பட்ட உற்பத்தியில் 50 சதவீதத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம். இம்மாத இறுதிக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலைமை சீரடைந்து விடும். தாக்குதலுக்கு முன்பிருந்த கச்சா எண்ணெய் இருப்பின் அளவு, இப்போது வந்து விட்டது. எனவே, சர்வதேச சந்தையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று அமெரிக்கா கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, நாங்கள் போதிய ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் குற்றம்சாட்ட முடியாது. சர்வதேச தரத்திலான ஆதாரங்கள் கிடைத்தால்தான் யார் தாக்குதலுக்கு காரணம் என்பதை சொல்ல முடியும் என்றார்.