துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Oct 15, 2019, 14:02 PM IST

சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்ட அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிரியா மீது துருக்கி திடீர் தாக்குதலை தொடங்கியது. சிரியாவில் உள்ள குர்தீஷ் போராளிகள் மற்றும் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியாகினர். இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சாதகமானது.

இதையடுத்து, துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்்கப் போவாதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், இந்த எச்சரிக்கையை துருக்கி அரசு கண்டுகொள்ளவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு அஞ்சி எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டோம். குர்தீஷ் போராளிகள் மீது போர் நடவடிக்கைகளை தொடர்வோம் என்று துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மவுல்ட் காவ்சாக்லோ தெரிவித்தார்.

இந்நிலையில், துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். துருக்கி அரசு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், துருக்கியுடன் அமெரிக்கா மேற்கொள்ளவிருந்த 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிக்கப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Leave a reply