அதிமுக பேனர் சரிந்து சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ரேடியல் சாலையில் வரிசையாக பேனர்களை வைத்திருந்தனர். சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று சரிந்து விழுந்து, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியில் அவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜாமீன் கேட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாயின.
இதன்பின், ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அவர் மனுதாரர் தரப்பிடம் கூறுகையில், பேனர் சரிந்த விழுந்த சம்பவத்திற்கு பின் விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவானது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதன்பின், விசாரணை பாதி முடிந்த நிலையில், வழக்கை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.