பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைதான நிரவ் மோடி, தன்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்வேன் என்று அங்குள்ள நீதிமன்றத்தில் மிரட்டல் விடுத்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில்(பி.என்.பி) ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடிவந்த நிலையில், அவர் லண்டனுக்கு தப்பியோடினார். இந்தியா வலியுறுத்தலின்படி, லண்டனில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், வின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிரவ் மோடி நேற்று(நவ.6) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மாஜிஸ்திரேட் எம்மா அர்பூத்நாட் விசாரணை செய்தார். நிரவ் மோடி வாக்குமூலம் அளிக்கையில், என்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது. அங்கு நியாயமான விசாரணை நடைபெறாது. எனக்கு அங்கு நீதி கிடைக்காது. எனவே, இந்தியாவுக்கு என்னை நாடு கடத்தினால், நான் உயிரை மாய்த்து கொள்வேன் என்றார். லண்டன் சிறையில் தன் மீது 3 முறை தாக்குதல் நடந்ததாகவும் கூறினார்.
நிரவ் மோடி சார்பில் வழக்கறிஞர் ஹுகோ ஹெய்த் வாதாடுகையில், நிரவ் மோடி மிகப் பெரிய பணக்காரர், வைர தொழிலதிபர் என்று அவரிடம் பணம் பறிப்பதற்காக சிலர் அவரை தாக்குகின்றனர். சிறையில் அவரை கீழே தள்ளி விட்டு, முகத்தில் குத்தி தாக்கியுள்ளனர். மூன்று முறை தாக்குதல் நடந்திருக்கிறது. எனவே, அவரை வீட்டுச்சிறையில் 24 மணிநேரமும்் கண்காணிப்பில் வைக்க வேண்டும். அவரை 40 லட்சம் பவுண்டு ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால், நிரவ் மோடியை வெளியே விட்டால் சாட்சியங்களை அழித்து விடுவார் என்பதால், அவருக்கு ஜாமீன் தர முடியாது என்று மாஜிஸ்திரேட் எம்மா அர்பூத்நாட் மறுத்தார். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.