வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் அளவுக்கு, ரஜினி திரையுலகில் ஆக்கப்பூர்வமாக என்ன சாதித்தார் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கோவாவில் நவம்பர் 20ல் துவங்கி, நவம்பர் 28ம் தேதி வரை நடக்கும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Icon of Golden Jubliee என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்திய சினிமாத் துறையில் முக்கிய பங்காற்றியவர் என்ற முறையில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் விருதை ஏற்று கொண்டார் என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா துறைக்காக தனது இன்னுயிரை தந்த பல நடிகர்கள் உள்ளனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நல்ல கருத்துக்களை தனது பாடலின் மூலம் நடித்து காட்டி அதன் மூலமே மக்கள் தலைவராக மாறி முதல்வராகவும் பொறுப்பேற்றவர் எம்ஜிஆர். அதன் பின்னர் வந்த நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் பின்பற்றிய கருத்துகளை கூறுவதாக சொல்லிக் கொண்டு, திரைப்படங்கள் மூலம் விஷமத்தை விதைத்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ரஜினி நடித்த படங்களில் புகைப்பிடிப்பது, மதுபானம் குடிப்பது போன்ற காட்சிகளை பார்த்து புகைபிடிக்கவும், மது குடிக்கவும் கற்று கொண்டவர்கள் ஏராளமனோர் என்ற உண்மையை யாராவது மறைக்க முடியுமா?
படத்தில் நடிப்பது மட்டும் சாதனை அல்ல, திரைப்படங்கள் என்பது மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் களம், அந்த களத்தை ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தி கொள்வதுதான் ஒரு நடிகரின் கடமை. ஆனால், அதனை நடிகர் ரஜினி செய்திருப்பாரா என்றால் கேள்விக்குறிதான்.
தமிழகத்தில் காலூன்றுவதற்காக, வாக்கு வங்கி அரசியலுக்காக, ரஜினியை எப்படியாவது பிஜேபி பக்கம் இழுத்து ஆதாயம் தேடப் பார்க்கும் மத்திய அரசின் இந்த செயல் ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் எந்த மாயாஜால வித்தை செய்தாலும் பிஜேபிக்கு இடம் இல்லை என்பதை இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் தமிழக மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுத்து கொண்டே இருப்பார்கள்.
ஆகவே, திரையுலகில் பல சாதனைகளை படைத்து இன்று சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத கலைஞர்களை தேடி மத்திய அரசு விருது அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.