அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து இப்போதே அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. பலரும் வீடுகளை பூட்டி விட்டு, வெளியேறி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கு இந்து அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. சா்ச்சைக்குரிய நிலத்தை இருதரப்பினரும் பங்கிட்டு கொள்ளும் வகையில் அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010ல் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருதரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தொடர்ந்து 40 நாட்களாக விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் இம்மாதம் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்பாக அவர் விசாரித்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வரும் 10ம் தேதிக்கு பிறகு அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அயோத்தியில் இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களில் சிலர் வீடுகளை பூட்டி விட்டு பக்கத்து ஊர்களில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுபவைபவங்களை கூட 10, 15 நாட்்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். பொருட்கள் கிடைக்காமல் போகலாம் என்ற கவலையில் மக்கள் பலர் அதிக பொருட்களை வாங்கி சேமித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அயோத்தி வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான உமர் பாரூக் கூறுகையில், ஏற்கனவே 1990ல் நடந்த கலவரம், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, 2010ல் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வந்தது போன்ற தருணங்களில் அயோத்தியில் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும், அது சில நாட்களில் தணிந்து விடும் என்றார்.