பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தேசத் துரோக வழக்கில் மரணதண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 1999ம் ஆண்டில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப், புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். 2007ம் ஆண்டு தனக்கு எதிராக மக்கள் மாறி விட்டதை உணர்ந்த அவர், நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கி, 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை சிறையிலடைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, அவர் மீது கடந்த 2014ம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில் மருத்துவச் சிகிச்சைக்காக அரசு அனுமதி பெற்று துபாய் சென்ற அவர், அங்கேயே தங்கி விட்டார். இதனால், அவரை நீதிமன்றம், தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்தது.
பெஷாவர் ஐகோர்ட் தலைமை நீதிபதி வாக்கர் அகமது சேத், சிந்து ஐகோர்ட் தலைமை நீதிபதி நாசர் அக்பர், லாகூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி சாகித் ஹரீம் ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிமன்றம், முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கை விசாரித்து வந்தது. அவர் மீதான தேசத்துரோக வழக்கில் விசாரணை முடிந்து நவம்பர் 28ம் தேதி தீர்ப்பு கூறுவதாக இருந்தது. ஆனால், அவர் துபாயில் இருந்து திரும்பி வராததால், தீர்ப்பை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
தற்போது அந்த தடை நீக்கப்பட்டதால், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதன்படி, முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.