குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாளை(டிச.18) அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தால் தங்களின் மொழி, இன அடையாளங்கள், உரிமைகள் பாதிக்கப்படும் என்று அம்மாநில பூர்வகுடி மக்கள் கூறுகின்றனர்.
இதே போல், இந்த சட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களை சேர்க்காததால் தமிழகத்திலும் அதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று(டிச.17) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக நாளை(டிச.18) அனைத்து கட்சிக் கூட்டத்தையும் திமுக கூட்டியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணியளவில் அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பாஜக கூட்டணியில் இடம் பெறாத மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்குமா என தெரியவில்லை.