ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. சொலெய்மணி கொலைக்கு பழிவாங்குவதாக அறிவித்த பின், ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இது.
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு ஆவேசமாக கூறியிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், ஈராக்கில் அல் அசாத், இர்பில் ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளின் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தியது. இதை டெஹ்ரான் மற்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.
வாஷிங்டனில் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் ஏவுகணைகள்தான் ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க கூட்டுப்படைத் தளங்களை தாக்கியுள்ளது. அல்அசாத், இர்பில் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் சேதங்களை மதிப்பிட்டு வருகிறோம் என்றனர்.
ஈரான், அமெரிக்கா இடையே போர் தொடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 65.54 டாலராக உயர்ந்துள்ளது. போர் நீடித்தால் இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.