ஈரானில் இருந்து கிளம்பிய உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 170 பேரும் உயிரிழந்தனர்.
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களும், ராணுவமும் அமெரிக்காவிடம் உள்ளது என்று டிரம்ப் எச்சரிக்கை விடு்த்திருக்கிறார்.
இந்த சூழலில், ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை உக்ரைன் நாட்டு போயிங் 737 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடன் தகவல் தொடர்பு துண்டானது.
இதையடுத்து, விமான போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விமானத்தை தேடத் தொடங்கினர். அந்த விமானம் பாரன்ட் மற்றும் ஷகாரியர் நகரங்களுக்கு இடையே கீழே விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானத்தில் பயணித்த 180 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர், விமானத்தில் 170 பேர் சென்றதாகவும் ஒருவர் கூட உயிர்தப்பவில்லை என்றும் கூறப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக தெரிய வருகிறது. எனினும், போர் பதற்ற சூழலில் இந்த விபத்து நடந்ததால், ஏவுகணை தாக்குதலில் விமானம் சிக்கியிருக்குமோ என்ற வதந்தி முதலில் பரவியது. பின்னர் அது விபத்துதான் என உறுதி செய்யப்பட்டது.