ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க பயங்கரவாதிகள் பலி.. ஈரான் அரசு டி.வி. செய்தி..

by எஸ். எம். கணபதி, Jan 8, 2020, 12:46 PM IST

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ஈரான் நாட்டு அரசு டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில், அல் அசாத் மற்றும் இர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாம் நல்லதுதான். உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களும், ராணுவமும் அமெரிக்காவிடம் உள்ளது.. என்று கடும் எச்சரிக்கை விடு்த்திருக்கிறார்.

இந்நிலையில், ஈரான் நாட்டு அரசு நடத்தும் தொலைக்காட்சியில் அந்நாட்டு புரட்சிகர தளபதி ஒருவர் தெரிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. அதில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 15 ஏவுகணைகளை வீசி, ஈராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் ஒரு ஏவுகணையை கூட இடைமறிக்க முடியவில்லை. இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர்கள் மற்றும் படைக்கருவிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 80 அமெரிக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுத்தால், மீண்டும் இந்த மண்டலத்தில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த 100 இடங்கள் குறி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு அமெரிக்கா உடனடியாக பதிலேதும் கூறவில்ைல. ஆனாலும், ஈரானுக்கு அமெரிக்கா நிச்சயமாக பதிலடி ெகாடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஈராக், ஈரான் பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த பிராந்தியத்தில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்ற நாடுகளும் இதே போல் பதற்றமடைந்துள்ளன.


More World News