தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்(எஸ்.சி) சேர்க்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்ட உத்தரவிட்டிருக்கிறது.
இந்து மதத்தில் இருந்து புத்த மற்றும் சீக்கிய மதங்களுக்கு மாறிய தலித் மக்கள், தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியல் இனத்திலேயே இருக்கிறார்கள். அதே சமயம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவோர் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் வருவதில்லை.
தலித் மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு காரணமாக இந்து தலித்துக்களுக்கும், மதம் மாறிய தலித்துக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகி விட்டது என்றும், மதம் மாறிய அனைத்து தலித் மக்களுக்கும் எஸ்.சி. பட்டியலில் வைத்து சலுகைகள் வழங்க வேண்டுமென்று நீண்ட நாளாக ேகாரிக்கை விடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அதே சமயம், தலித் கிறிஸ்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் அளித்தால், அது மதமாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்று வலதுசாரி இந்து அமைப்புக்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில், தலித் கிறிஸ்தவர்களுக்கான கவுன்சில் அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கு சமூகத்தில் எவ்வித முன்னேற்றமும் கிடைக்கவில்லை. அவர்கள் சமூகத்தில் பின்தங்கியே உள்ளனர். எனவே, அவர்களையும் எஸ்.சி. பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இம்மனு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.