டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர்.
இதில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜே.என்.யு மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, ஜே.என்.யு வளாகத்தில் போராட்டம் நடத்தும் மாணவர்களை யோகேந்திர யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் யெச்சூரி, டி.ராஜா, பாலிவுட் நடிகை தீபிகா படுேகானே உள்ளிட்டோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், ஆயிஷ் கோஷிடம் ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், இன்று(ஜன.8) காலை ஜே.என்.யு சென்ற தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அங்கு ஆயிஷ் கோஷை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவரிடம் தாக்குதல் குறித்து விசாரித்தறிந்தார்.