சீனாவில் கொரோனா நோய்க்கு பலியானோர் 80 ஆக உயர்வு.. வெளிநாட்டினர் வெளியேற்றம்.

by எஸ். எம். கணபதி, Jan 27, 2020, 10:44 AM IST

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியது. அந்நாட்டில் இருந்து அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் வெளியேறி வருகின்றனர்.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதையடுத்து, அந்த நகருக்கு சீல் வைக்கப்பட்டு, விமானநிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்து இடங்களிலும் மக்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

ஆனாலும் இந்த வைரஸ் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. தற்போது, இந்த வைரஸ் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், சீனாவில் உள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை திருப்பி அழைத்து வர ஏற்பாடுகளை செய்துள்ளன. பல ஆயிரக்கணக்காேனார் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவும் சீனாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வருகிறது. இதற்கென தனியாக ஒரு இலவச தொடர்பு எண்ணை அளித்துள்ளது. மேலும், இந்தியா திரும்புவோருக்கு தூதகரங்கள் மூலமாக அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீனாவில் நேற்்று வரை கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக இருந்தது. தற்போது பலி எண்ணிக்கை 80ஐ தாண்டி விட்டது. மேலும், 2,684 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியதாக நேற்றைய கணக்கெடுப்பு தெரிவித்தது. தற்போது மேலும் 1000 பேருக்கு நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது உகானில் தனி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 14 ஆயிரம் பாதுகாப்பு கவச உடைகளும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கையுறைகளும் நேற்று அனுப்பப்பட்டன.

இதற்கிடையே, சர்வதேச நோய் தடுப்பு மையம் விடுத்துள்ள வேண்டுகோளில் நோய் தொற்று பரவலாமல் இருக்க பல முறை கைகளை கழுவ வேண்டுமென கூறியுள்ளது.
கொரோனா வைரஸ், உகான் நகரில் உள்ள கால்நடைச் சந்தை மூலமாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால்,சீனாவில் கால்நடைச்சந்தைகளை தற்காலிகமாக மூடியுள்ளனர். இந்த நோய் தடுப்புக்கு இன்னும் சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

You'r reading சீனாவில் கொரோனா நோய்க்கு பலியானோர் 80 ஆக உயர்வு.. வெளிநாட்டினர் வெளியேற்றம். Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை