இலங்கையைச் சேர்ந்த வஜ்ரசித்ரசேனா, இந்திரா தசநாயகே ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குடியரசு தினவிழாவையொட்டி, பத்மவிருதுகள் நேற்று(ஜன.26) அறிவிக்கப்பட்டன. பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டவர்களில் 2 இலங்கை பெண்களும் அடங்குவார்கள். ஒருவர், வஜ்ர சித்ரசேனா என்ற 87 வயது நடனக் கலைஞர், சிங்களப் பெண். இவர் பாலே நடனத்தில் சிறந்து விளங்கியவர். அது மட்டுமல்ல, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நடனக் கலைகளை ஆய்வு செய்தவர். இந்தியாவில் ஒடிசி, கண்டிய நடனங்களை ஆய்வு செய்து வளர்த்தவர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கலாசார உறவுகள் வலுப்படுவதற்கு உதவியாக இருந்தார்.
அதே போல், மறைந்த பேராசிரியை இந்திரா தசநாயகே இந்தியாவில் பிறந்தவர். லக்னோ பல்லைக்கழகத்தில் பணியாற்றி விட்டு, இலங்கை சென்றவர், அங்கு களனி பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அங்கு இந்தி மொழியை அறிமுகம் செய்து அதன்மூலம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நட்புறவு அதிகரிக்க காரணமாக இருந்தவர். இவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் பத்மவிருதுகள் தோற்றுவிக்கப்பட்ட 1954ம் ஆண்டு முதல் இது வரை 272 வெளிநாட்டினரும் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் வெளிநாடு வாழ் இந்தியரும் அடங்குவார்கள்.