டெல்லியில் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்..

by எஸ். எம். கணபதி, Jan 27, 2020, 11:23 AM IST

நாடாளுமன்றம் வரும் 31ம் தேதி கூடுவதை அடுத்து, வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டு முதல் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். அதன்பின்பு, பட்ஜெட் மீது பொது விவாதம் நடத்தப்படும். இந்த தொடர் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடரின் 2 வது பகுதியாக மார்ச் 2ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும். ஏப்ரல் 3ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதை அடுத்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 30ம் தேதி, நாடாளுமன்ற நூலக கட்டிட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி தெரிவித்தார்.


Leave a reply