எங்களுக்கு துப்பாக்கி தேவையில்லை; குழந்தைகளின் மனங்களைப் பண்படுத்தும் பென்சில்கள், பேனாக்கள், காகிதம், ஆகியவற்றைத் தாருங்கள், என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு புளோரிடா மாகாண ஆசிரியை கடிதம் எழுதியுள்ளார்.
மார்க்கரட் ஆன்னியின் செய்தி இன்றைக்கு புளோரிடாவையும் தாண்டி அமெரிக்கா முழுவதிலும் ஆசிரியப் பெருமக்களின் முழக்கமாக மாறியிருக்கிறது. ஆசிரியர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் முழக்கமாகவும் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.
கடந்த பிப்ரவரி 14 அன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மென் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவரான நிக்கோலஸ் குரூஸ் என்பவர் பள்ளிக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 14 மாணவர்கள் உட்பட 17 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர்.
இந்த கொடூரச் சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது. அமெரிக்காவின் ஒட்டுமொத்த சமூகமே துப்பாக்கி மயமாக்கப்பட்டு உள்ளதை, இத்தகைய சம்பவங்கள் காட்டுகிறது. 1999 முதல் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்கா முழுவதும் 16 நாட்களுக்கு ஒருமுறை பொதுவெளியில் துப்பாக்கிச்சூடு - படுகொலைகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாதிக்கப்பட்ட புளோரிடா மாகாண மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வாஷிங்டனுக்கு வரவழைத்து ஜனாதிபதி டிரம்ப் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, ‘பள்ளிக்கூடங்களில் தாக்குவதற்கு யாரேனும் துப்பாக்கிகளோடு வந்தால் திருப்பி தாக்குவதற்கு அனைத்து ஆசிரியர்களுக்கும் துப்பாக்கி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று அறிவித்தார்.
இதற்கு நாடும் முழுவதிலும் கண்டனங்கள் எழுந்தது. டிரம்ப் கூறியதற்கு எதிராக புளோரிடாவிலும் அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் ஆசிரியர் சமூகமும், மாணவர் சமூகமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மார்க்கரட் ஆன்னி என்ற ஆசிரியை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “பென்சில்கள், பேனாக்கள், காகிதம், புத்தகங்கள், வரை வதற்கான வண்ணங்கள், தொழில்நுட்பங்கள், குழந்தைகளின் மனங்களைப் பண்படுத்தும் கலைகள் ஆகியவற்றை எங்களிடம் ஆயுதமாகத் தாருங்கள், துப்பாக்கிகளை அல்ல...!” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.