புது ஆட்டக்காரர்கள், புதுப் பயிற்சியாளர், புது கேப்டன் என்று படு உற்சாகத்தில் இவ்வருட ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள போகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. நேற்று அந்த அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகள் விளையாடுவருமான ரவிசந்தர் அஷ்வினை கேப்டனாக அறிவித்து ஷாக் கொடுத்தது.
பலரும்,`இந்திய அணியில் பல ஆண்டுகள் ஆடிய சீனியரான யுவராஜ் சிங்கை விடுத்து எதற்கு அஷ்வினுக்கு பஞ்சாப் அணியின் கேப்டன் பதவி தரப்பட்டது’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அணி நிர்வாகம் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், `நான் எப்போதுமே ஒரு பௌலர்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன். அதற்குக் காரணம், எனக்கு பௌலர்களாகவும் கேப்டன்களாகவும் இருந்த வசீம் அக்ரம், வக்கார் யுனீஸ், கபில் தேவ் போன்றவர்களை மிகவும் பிடிக்கும். அவர்கள் அணியை வழி நடத்தும் விதமும் பிடிக்கும்.
அதனால்தான், பஞ்சாப் அணிக்கு ஒரு பௌலர் கேப்டனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். அதே நேரத்தில், யுவராஜ் சிங்கையும் கேப்டன் பதவியை கொடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், நிர்வாகத் தரப்பில் பலரும் அஷ்வினுக்கு சாதகமாக இருக்கவே, அவர் கேப்டன் ஆக்கப்பட்டுள்ளார்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.