கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதன்பின், இந்த வைரஸ் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்த சீன வைரஸ் நோய் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பது தெரிய வந்தது. தற்போது வரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது. 11,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், ஏர்இந்தியா சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லிக்கு வந்து சேர்ந்த அவர்கள், அரியானாவின் மானேசரில் உள்ள இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்யவிருக்கிறார்கள். நோய் தொற்று பாதிப்பில்லாதவர்கள் மட்டுமே அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
சீனாவில் இருந்து வந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா, கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவை சேர்ந்த 22 பேரும், மற்ற மாநிலங்களை சேர்ந்த சிலரும் உள்ளனர்.