எதிரும் புதிருமாக காணப்படும் முதலாளிய - தமிழ் வெகுஜன ஊடகங்களும், சன்னி- இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும் ஓரணியில் நின்று சிரியாவுக்காக அழுகிறார்கள் என்றால், பின்னணியில் ஏதோ ஒரு அரசியல் சக்தி அவர்களை ஒன்றிணைக்கிறது என்று அர்த்தம்.
ஒரு மாதத்திற்கு முன்னர் வட மேற்கு சிரியாவில் உள்ள அப்ரின் பிரதேசம் துருக்கி படையினரால் தாக்கப்பட்டது. அப்போதும் பொது மக்களின் உயிரிழப்புகள், சொத்தழிவுகள் அதிகமாக இருந்தன. விமானக் குண்டுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் படங்கள் வெளியாகின. அது குறித்து சர்வதேச மட்டத்தில் எந்த எதிர்வினையும் எழவில்லை. எங்கும் கள்ள மௌனம் நிலவியது.
அப்ரின் பிரதேசத்தில் பலியான மக்களின் அவலக் குரல் வெகுஜன ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. அங்கு கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக யாரும் அழவில்லை. அந்தப் படங்களை யாரும் பார்க்கவில்லை. சமூக வலைத்தளங்களில் செயற்படும் ஒருவர் கூட கொந்தளிக்கவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
குர்தியர்களும் சன்னி முஸ்லிம்கள் தானே? அது தமிழ் பேசும் சன்னி முஸ்லிம் மதவாதிகளின் உணர்வுகளை தட்டி எழுப்பாதது ஏன்? சிரியாவில் குர்தியரும் தனி நாடு கேட்டு போராடிய தேசிய விடுதலை இயக்கத்தவர் தானே? அது தமிழீழத்தை தலையில் வைத்திருக்கும் தமிழ்த்தேசியவாதிகளின் கண்களை உறுத்தாது ஏனோ? அப்போது மட்டும் கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருந்தது ஏனோ?
எனக்கு இந்த லாஜிக் என்னவென்று புரியவில்லை. உலக நாடுகளை விட்டு விடுவோம். சிரியாவில் நடக்கும் சிக்கலான யுத்தத்தில் எந்தப் பக்கத்தில் மக்கள் கொல்லப்பட்டாலும் கண்டிப்பதை விட்டு விட்டு, குறிப்பிட்ட சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழுவது ஏனோ?
டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள கூத்தா [Ghouta] பிரதேசம், கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள FSA போன்ற அமைப்புகள் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளின் நிதியில் இயங்குவதால், அவர்கள் வெளியிடும் தகவல்களும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால், போரில் வெல்ல முடியாவிட்டாலும் பிரச்சாரப் போரில் வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் செயற்படுகின்றன.
கடந்த ஐந்தாண்டு காலமாக நடக்கும் சிரியா போரில் அடிக்கடி காணும் காட்சிகள் இவை. அரசும், கிளர்ச்சிக் குழுக்களும் மாறி மாறி பிரச்சாரம் செய்வது வழமை. ஒருவர் மாறி ஒருவர் போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தி, தமக்கு சார்பானவர்களின் அனுதாபத்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
இதனால் களைப்படைந்த மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள், தற்போது நடக்கும் கூத்தா யுத்தம் தொடர்பான தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அன்றாடம் செய்தி தெரிவிக்கும் போதும், "கிளர்ச்சிக் குழுக்களின் பிரச்சார மையத்தால் வெளியிடப்பட்ட உறுதிப் படுத்தப்படாத தகவல்கள்" என்று சேர்த்தே சொல்கின்றன.
சிரியா இராணுவம் ஒன்றும் சிறந்தது அல்ல. அரச படைகளின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளம் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவை போர்க்குற்றங்களுக்குள் அடங்கும் என்பதில் மறுப்பில்லை. இருப்பினும், கிளர்ச்சியாளர்களும் புனிதர்கள் அல்ல. ஐ.எஸ். வானத்தில் இருந்து குதிக்கவில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை.
ஐ.எஸ்.கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா மீதான போரின் போதும், ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். குழந்தைகளும் பலியாகின. ஐ.எஸ். அந்தப் படங்களைக் காட்டி பிரச்சாரம் செய்து அனுதாபம் தேடியது.
"உலகமே பார்த்துக் கொண்டிருக்க எம்மின மக்களை இனப்படுகொலை செய்கிறார்கள்" என்று ஓலமிட்டனர். கொத்துக் குண்டுகள் வீசப் பட்டதாகவும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.
அப்போது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடக்கிறது" என்று கைதட்டி வரவேற்றவர்கள் தான் இன்று "குழந்தைகளுக்கு எதிரான போர் நடக்கிறது" என்கிறார்கள். இவர்கள் எப்போது யாரை ஆதரிப்பார்கள், யாரை எதிர்ப்பார்கள், யாரின் காலை வாரி விடுவார்கள் என்று தெரியாமல் உள்ளது. ஒரு காலத்தில் ஐ.எஸ். விடுதலைப் போராளிகள் என்றார்கள். பிறகு பயங்கரவாதிகள் என்று சொல்லி காலை வாரினார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம். நாம் என்ன அரசியலைப் பேச வேண்டும் என்பது வாஷிங்டனில் தீர்மானிக்கப்படுகிறது. அங்கிருந்து வரும் அறிவுறுத்தல்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும். அவர்கள் எதிர்க்க சொன்னால் எதிர்க்க வேண்டும். ஆதரிக்க சொன்னால் ஆதரிக்க வேண்டும்.
நன்றி : கலையரசன்