மோடி சிறந்த நண்பர்.. இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி..

by எஸ். எம். கணபதி, Feb 23, 2020, 21:25 PM IST

இந்தியப் பயணத்திற்குப் புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இந்திய மக்களைச் சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். இவர்கள் பிப்.24ம் தேதி காலை 11.30 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேருகின்றனர்.

அங்கு மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்கிறார்கள். பகல் 12.15 மணிக்கு அங்குச் செல்லும் அவர்கள் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்து, காந்தியின் அடையாளங்களைப் பார்வையிட்டு விட்டு புறப்படுகின்றனர்.
அங்கிருந்து அவர்கள் அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியத்திற்கு செல்கிறார். அவர்களுக்கு வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பகல் 1.05 மணிக்கு ஸ்டேடியத்திற்கு செல்லும் டிரம்ப், அங்குப் பிரம்மாண்டமாக நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருடன் நமது பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஹவ்டி மோடி என்ற பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் டிரம்ப்பும் பங்கேற்றார். அதே போன்று, இப்போது நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து, ஆக்ராவுக்கு டிரம்ப் தம்பதி சென்று தாஜ்மகாலைப் பார்வையிடுகின்றனர்.

மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை டிரம்ப் சந்தித்துப் பேசுகிறார். இந்தியா, அமெரிக்கா இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். அகமதாபாத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் தொடங்கி அவர் நம்முடன் இருக்கும் நாள் நமக்குப் பெருமையைத் தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவில் வெள்ளை மாளிகையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட அதிபர் டிரம்ப், செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியர்களுடன் நாளை இருப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். நாங்கள் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்கப் போகிறோம். நீண்ட நாளாக மோடியுடன் நான் தொடர்பு கொண்டு வருகிறேன். எனக்கு அவர் சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டார்.

READ MORE ABOUT :

Leave a reply