உலகம் முழுவதும் 3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு...

by எஸ். எம். கணபதி, Mar 22, 2020, 12:15 PM IST

உலகம் முழுவதும் 3 லட்சத்து 8,215 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 175 நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி, நேற்று(மார்ச் 21) வரை 3 லட்சத்து 8,215 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 95,824 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 13,062 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய நிலையில், உலகம் முழுவதும் 3 லட்சத்து 99,329 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 90,030 பேருக்குச் சாதாரண அளவில்தான் இந்த வைரஸ் நோய் பாதித்திருக்கிறது. 9,279 பேருக்கு நோய் வீரியம் அதிகமாகி, அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் 81,054 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இவர்களில் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருக்கிறார்கள். சீனாவில் இது வரை 3261 பேர் உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்காவில் 24,148 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

இந்தியாவில் 275க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளதைக் கண்டறிய மொத்தமே 111 பரிசோதனை மையங்கள்தான் நேற்று வரை செயல்பட்டிருக்கின்றன. இன்று முதல் தனியார் பரிசோதனை மையங்களும் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அதிகமான பரிசோதனை மையங்கள் செயல்படும் போதுதான், உண்மையிலேயே கொரோனா தொற்று நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரிய வரும்.

READ MORE ABOUT :

Leave a reply