இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் மேட் ஹான்காக் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது.
சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இங்கிலாந்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குத் தொற்றியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஏற்கனவே பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்று கூறப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மீண்டும் சார்லிக்குச் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது :எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறி காணப்பட்டதால், தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் கிறிஸ்விட்டி என்னைப் பரிசோதனை செய்ய ஆலோசனை கூறினார். அதன்படி, பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, வேலைகளைத் தொடர்ந்து செய்வேன்.என்னால் வீட்டிலிருந்தபடியே நன்கு செயல்பட முடியும். நவீனத் தொழில்நுட்ப உதவிகளின் மூலம் நான் சிறப்பாகச் செயல்படமுடியும். கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடுவதில் அரசு குழுவை வழி நடத்திச் செல்வேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா நோய்த் தொற்று பாதித்திருப்பது உறுதியானது.