உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகமாகப் பரவியுள்ளது.அதிலும் அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. அமெரிக்காவில் ஒரு லட்சத்து 1657 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1581 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நியூயார்க் பகுதியில் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாகாணத்தில் அதிகபட்சமாக 44,876 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மிகவும் அலட்சியமாக இருந்த அதிபர் டிரம்ப் அரசு, தற்போது பதற்றமடைந்து வேகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் சீனா மீது கடும் விமர்சனம் செய்த டிரம்ப் நேற்று சீன அதிபர் ஜின்பிங்க்குடன் தொலைப்பேசியில் பேசினார்.இது பற்றி, டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், சீன அதிபருடன் பேசினேன். கொரோனா வைரஸ் பற்றி அதிகமாக அறிந்துள்ள சீனாவிடம் அதன் அனுபவங்களைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளேன். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.