அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகமாகும் என்றும், ஏப்ரல் 30ம் தேதி வரை சமூக விலகல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் நேற்றைய(மார்ச்29) நிலவரப்படி, ஒரு லட்சத்து 41,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்நிலையில், மருத்துவத் துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை மிக அதிகமாகும் எனத் தெரிகிறது. குறிப்பாக, ஈஸ்டர்(ஏப்.12) சமயத்தில் இந்த சாவு எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. எனவே, சமூக விலகல்(சோஷியல் டிஸ்டன்சிங்) கட்டுப்பாடுகளை நாம் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படும். நாம் எவ்வளவு தூரம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகிறோமோ, அந்த அளவுக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். புதிய கட்டுப்பாடுகள் குறித்து மார்ச்30(இன்று) அறிவிக்கப்படும்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.