திருச்சியில் தனியார் சாப்ட்வேர் கம்பெனி, கொரோனா நோயாளிகளுக்கு மருந்து கொண்டு செல்லும் ரோபோக்களை தயாரித்து அரசு மருத்துவமனைக்கு இலவசமாகக் கொடுத்துள்ளது.
திருச்சியில் உள்ள புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம், பலவிதமான ரோபோக்களை தயாரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் வகையில் ஜாபி என்ற ரோபோவை தயாரித்து, அவற்றை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்தது.கொரோனா சிறப்பு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை இந்த ஜாபி ரோபோக்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தது. இந்த ரோபோக்கள், வாய்ஸ் இன்ட்ராக்டிவ் தொழில் நுட்பத்தில் செயல்படுகின்றன. இவற்றை மொபைல் மூலமாக கண்ட்ரோல் பண்ணலாம்.
இந்த ரோபோக்களை திருச்சி மாவட்டக் கலெக்டர் சிவராசு நேற்று பார்வையிட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இந்த ரோபோக்கள் தண்ணீர் கொண்டு சென்றன. இவை வெற்றிகரமாகச் செயல்படவே, அரசு மருத்துவமனைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இது குறித்து அந்த தனியார் நிறுவனத்தின் பொறியாளர் குருமூர்த்தி கூறுகையில், கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்களைக் கொண்டு சென்று கொடுப்பதற்கு இவை உதவும். இதனால், மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளின் அருகில் செல்வதைக் கூடிய வரை தவிர்க்கலாம். ஓரிரு நாட்களில் இந்த ரோபோக்கள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற ரோபோக்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.