இந்தியாவில் நேற்று(மார்ச்29) வரை 1024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 1024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 211 பேருக்கும், கேரளாவில் 198 பேருக்கும், குஜராத்தில் 63 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. டெல்லியில் நேற்று மட்டும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 13 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள். 4 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மேலும் 6 பேருக்கு எப்படி பரவியது என தெரியவில்லை. இவர்களையும் சேர்த்து டெல்லியில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதும் மற்ற 4 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. தமிழ்நாட்டில் இவர்களையும் சேர்த்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.