கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கென புதிய முகக் கவசத்தை ரூர்கி ஐ.ஐ.டி. தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நோய் மேலும் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை வசதிகளும், மருத்துவப் பாதுகாப்பு வசதிகளும் போதிய அளவில் இல்லை என்பதால், மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்குத் தரமான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தரப்படவில்லை என்ற பிரச்சனை இருக்கிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட மாநிலம், ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்கள் ஒரு புதிய முகக்கவசத்தை தயாரித்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக இதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த முகக்கவசத்தை தயாரிக்க ரூ.45 வரை செலவாகியிருக்கிறது. எனினும், மொத்தமாகத் தயாரிக்கும் போது இதன் விலை ரூ.25க்குள் அடங்கும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த முகக்கவசங்கள், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.