மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி

Personal Protective Equipments procurements will reach the States soon, says Harsh Vardhan

by எஸ். எம். கணபதி, Apr 4, 2020, 13:23 PM IST

கொரோனா தடுப்பு பணிக்காக வெண்டிலேட்டர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் வாங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாநிலங்களுக்கு அவை வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இது வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 550 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய்க்கு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நோய் தாக்கம் அதிகமானால் நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் தேவைப்படும். எனவே, அடுத்த வாரத்தில் அதிகமான எண்ணிக்கையில் வெண்டிலேட்டர் தேவைப்படும். இந்தியாவில் தற்போது சுமார் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள்தான் இருப்பு உள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் 350 வெண்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. மருத்துவர்களுக்கான என்95 முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகளும் பற்றாக்குறையாக உள்ளன.


இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று(ஏப்.4) காலை டெல்லியில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மருத்துவமனையில் 1500 படுக்கைகளும் தயாராக உள்ளன. இது வரை 290 பேர் கொரோனா பாதித்து இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
என்95 முகக்கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் செய்யும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அவற்றைப் பெற்று மாநிலங்களுக்கு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

You'r reading மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை